தனிமையில் இருக்க வேண்டும் என்ற அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 390ஐ தாண்டியது. இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் கரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனிமையில் இருக்க வேண்டும் என்ற அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்திய சிலர் வீட்டில் இருக்காமல் வெளியே சென்று வருகின்றனர். அரசின் அறிவுரையை மீறிய விவரம் மாவட்ட நிர்வாகம், காவல்துறையிடம் தரப்பட்டுள்ளது.
கரோனாவை தடுக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதை அவர்கள் பின்பற்றுவதில்லை. வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் சிலர் வெளியே சுற்றுவதாக அமைச்சர் குற்றம் சாட்டினார். அறிவுறுத்தப்பட்ட பயணிகள் வெளியே நடமாடுவது அச்சுறுத்தலாக அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.