அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் நுண்ணுயிரியல் துறையில் 'நுண்ணுயிரிகளின் பார்வையில் கரோனா வைரஸ்' எனும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் இணைய வழியிலும், நேரிடையாகவும் நடைபெற்றது. வேளாண் நுண்ணுயிரியல்துறை தலைவர் பேராசிரியர் முரளிகிருஷ்ணன் வரவேற்று பேசினார். அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புல முதன்மை பேராசிரியர் சுந்தரவரதராஜன் தலைமை தாங்கினார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து முனைவர் பிரபுதாஸ் விளக்கிப் பேசினார். நிகழ்வில் மூத்த மருத்துவர் ஜெயஸ்ரீராமநாதன், கரோனா வைரஸ் பற்றியும், தடுப்புமுறைகளைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
இதனைதொடர்ந்து, கேரளாவைச் சார்ந்த உதவிப் பேராசிரியர் முனைவர் கங்கா, கரோனா வைரஸின் மரபணு பற்றியும் இந்தியாவை தாக்குகின்ற பலவகையான வைரஸ்களைப் பற்றியும் விளக்கிக் கூறினார். ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவர் அருணி, கரோனா அடைந்த உருமாற்றங்களை பற்றி குறிப்பாக 2019 முதல் 2021 வரை கரோனாவின் திடீர் மாற்றங்களை விளக்கமாக எடுத்துக் கூறினார். அதேபோல், ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவர் காந்தரூபன்பாலா, கரோனா பாதித்த நபர்களுக்கான மேம்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகளைப் பற்றியும் தடுப்பூசிகளைப் பற்றியும் கூறினார்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் விஜயதீபன் பாலசுப்பிரமணியம் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் கலைஅமுதா இருவரும் நோயின்போது ஏற்படும் மனஅழுத்தங்களையும் அதற்கான தீர்வுகளையும் பற்றி மிகச் சிறந்த முறையில் விளக்கிக் கூறினார்கள். இந்த நிகழ்ச்சியினை பேராசிரியர்கள் மகாலட்சுமி, விஜயபிரியா, பாண்டீஸ்வரி, பாரதிராஜா, தினகர் ஸ்ரீமன்நாராயணன், சிவகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். பேராசிரியர் விஜய பிரியா நன்றி கூறினார். இந்நிகழ்வினை முனைவர் மகாலட்சுமி தொகுத்து வழங்கினார். இதில் உலகெங்கிலுமிருந்து 250க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.