கொடிய நோயான கரோனா தமிழகத்திலிருந்து துரத்துப்படுகிறது என்கிற நம்பிக்கை விதையாக நாளுக்கு நாள் இதன் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவதோடு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு இனி மரணம்தான் என நம்பிக்கை இழந்த நோயாளிகள் பூரண குணம் பெற்று, வீட்டுக்கு செல்லும் எண்ணிக்கையைும் அதிகரித்து வருகிறது..
இந்த வைரஸ் தொற்று தொடங்கி விட்டது என தமிழகத்தில் தெரிந்த போதே அபாய நகரமாக அறிவிக்கப்பட்டது ஈரோடு. தொடர்ந்து அந்த நிலையில் தான் இருந்தது. சுமார் 70 பேர் வரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் மூலம் தொடர்புடையவர்கள் என கணக்கிட்டு ஏறக்குறைய ஒரு லட்சத்தி இருபது ஆயிரம் பேர் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். அந்த அளவுக்கு இந்த வைரஸ் தொற்றின் தீவிரம் இங்கு இருந்தது.
இந்த நிலையில் மாவட்ட அளவிலான அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என எல்லோருமே தொடர்ந்து ஈரோடு மாவட்டதில் இந்த வைரஸ் தொற்று இல்லாமல் செய்ய வேண்டுமென அர்ப்பணிப்போடு பாடுபட்டார்கள். அனைத்து துறை ஊழியர்களும், அவர்களின் பங்களிப்பும் அளப்பரியது. அதனால்தான் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்ட ஈரோடு மாவட்டத்தில் இறப்பு என்பது ஒரே ஒரு நபருக்குதான் ஏற்பட்டது. அதன் பிறகு சிகிச்சை முடித்து, தொடர்ந்து அவர்களுக்கு இத்தொற்று இல்லை என்று ஆய்வறிக்கை வந்தபிறகு, மேலும் அவர்களை 14 நாட்கள் வைத்து இரண்டாவது முறையும் இத்தொற்று உள்ளதா என பரிசோதனை செய்து அதிலேயும் இல்லை என்று வந்த பிறகு அப்படிப்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்பும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது.
ஏற்கனவே ரயில்வே காலனி மருத்துவமனையில் பணிபுரிந்த ஒரு மருத்துவர் உட்பட 4 பேரும் இதிலிருந்து விடுபட்டு அவர்கள் வீட்டுக்கு சென்றனர். அதேபோல் திருச்சியில் இருந்து வந்த ஒரு நபர் இதிலிருந்து விடுபட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அதன்பிறகு சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பு 13 பேர் குணமாகி, அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று மாலை, 9 பேர் இந்த வைரஸ் தொற்று இல்லை என்று உறுதியான பிறகு அவர்களும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 68 பேர் இதில் பாதிப்பு உள்ளவர்கள் 44 பேர். இந்த 44 பேரும் நல்ல நிலையில், உடல் ஆரோக்கியமாக இருப்பதாக மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்குனர் சவுண்டம்மாள் நம்மிடம் கூறினார்கள். இந்த ஒன்பது பேரும் வீட்டுக்கு அனுப்பும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஐ.பி.எஸ், பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் சவுண்டம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு வீட்டுக்குச் செல்லும் அந்த ஒன்பது பேருக்கும் வாழ்த்துக் கூறியதோடு, இந்த நோயில் இருந்து நீங்கள் விடுபட்டு விட்டீர்கள் இதுபோல மற்ற யாருக்கும் வரக்கூடாது என்பதால் மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், எனக் கூறி அனுப்பி வைத்தனர்.
தீராத துன்பமாக இந்த வைரஸ் தொற்று மனித குலத்திற்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்து வரும் நிலையில், இதையும் மனித ஆற்றல் எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை இச்சிகிச்சையில் இருந்து மீண்டவர்கள் முகத்தில் தெரிகிறது.