கரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக விலக்கத்துக்காக ஊரடங்கு உத்தரவை இந்தியரசு அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 15ந்தேதிவரை அறிவிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை மதித்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, அத்தியாவசிய பொருட்கள் பெற மட்டுமே வெளியே வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் நோயாளிகளை வரிசையில் வரவைக்க வேண்டும், ஒவ்வொருவருக்கும் இடையே 3 அடி இடைவெளி இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை கடுமையாக கடைப்பிடிக்க வைக்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை வலியுறுத்தியுள்ளது அரசாங்கம்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்று 3வது நாளாகியுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒரு பகுதியை வலம் வந்தபோது, சிறுப்பாக்கம், ராதாபுரம், போந்தை, நாராயணகுப்பம், மேல்மலமஞ்சனூர், குங்கிலிநத்தம், வானாபுரம் போன்ற கிராமங்களில் மக்கள் இந்த சமூக விலக்கலை சரியாக கடைப்பிடிக்கவில்லை என்பதை அறிய முடிந்தது. வேலை எதுவும் இல்லாததால் ஆண்கள் கூட்டமாக உட்கார்ந்து சீட்டு விளையாடுவது, தாயம் விளையாடுவது, வெட்டுப்புலி ஆட்டம் ஆடுவது என கும்பல், கும்பலாக அமர்ந்து விளையாடுவதை காண முடிந்தது. பெண்களும் 4 பேர், 5 பேர் என அமர்ந்து கதை பேசிக்கொண்டு இருந்தனர்.
வானாபுரம் அருகேயுள்ள மெய்யூர் என்கிற இடத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கர்ப்பிணி பெண்கள், காய்ச்சல், சளி தொந்தரவுக்காக 40க்கும் அதிகமான நோயாளிகள் வந்துயிருந்தனர். நோயாளிகளுடன் வந்தவர்கள் அங்கங்கு இடைவெளி விட்டு அமர்ந்துயிருக்க நோயாளிகளை ஒரு அறையில் மொத்தமாக அமரவைத்து ஒவ்வொருவராக அழைத்து சிகிச்சை அளித்துக்கொண்டு இருந்தார் அங்கிருந்த மருத்துவர். அதேநேரத்தில் பலர் வரிசையில் அரை அடி கூட இடைவெளி விடாமல் நோயாளிகள் நெருக்கியடித்து நிற்க இது எதையும் கண்டுக்கொள்ளாமல் இருந்தனர் மருத்துவர்களும், மருத்தவமனை செவிலியர்கள் உட்பட ஊழியர்கள்.
காவல்துறை கூட்டு சாலைகள் உள்ள இடத்தில் பாதுகாப்புக்காக இருந்தாலும் பக்கத்து கிராமம் போகிறேன் எனச்சொல்லிவிட்டு செல்வது அதிகமாக உள்ளது. அவர்களாளும் ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை என்கின்றனர். தனித்தனியாக போனால் பரவாயில்லை, இந்த இளைஞர்கள் ஒரே வண்டியில் 3பேர், 4 பேர் என செல்கிறான்கள். இவன்களால் நோய் வந்து பரவி விடும்மோ என பயமாக இருக்கிறது என்கிறார்கள் காவல்துறையினர்.