Skip to main content

கரோனா தொற்றை கண்டறியும் பி.சி.ஆர். ஆய்வகங்கள் எத்தனை உள்ளன? -பொன்ராஜ் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு!

Published on 05/05/2020 | Edited on 05/05/2020

 

ddd



கரோனா தொற்றைக் கண்டறியும் பி.சி.ஆர். ஆய்வகங்கள் நாடு முழுவதும் எத்தனை உள்ளன? என்பது குறித்த அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, ஊரடங்கு மட்டும் போதாது எனவும், வைரஸை கண்டறிந்து, வைரஸ் பாதித்தவர்களைத் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்க வேண்டியது முக்கியம் என்ற, உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலைச் சுட்டிக் காட்டி, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

அவர் தனது மனுவில், 138 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 10 லட்சம் பேரில், 452 பேருக்கு மட்டுமே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.  அதில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. உலக நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.
 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள 41 ஆய்வகங்களைத் தவிர்த்து, தமிழகத்தில் அறிவியல் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் 126 பி.சி.ஆர். ஆய்வகங்கள் உள்ளன. அவற்றை முழு அளவில் பயன்படுத்துவதாக இருந்தால் 30 நாட்களில் 14 லட்சம் பேருக்குச் சோதனை செய்ய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்த ஆய்வகங்கள் தவிர, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் உள்ள பி.சி.ஆர்.ஆய்வகங்கள் எத்தனை என்பது குறித்து மத்திய அரசும், தமிழகத்தில் எத்தனை கல்வி நிறுவனங்களில் இந்த வசதிகள் உள்ளன என்பது குறித்து மாநில அரசும் அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் எனவும், அந்த ஆய்வகங்களை, பரிசோதனைக்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 2013- 14 முதல் இரண்டு சுகாதார ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு 1,100 கோடி ரூபாய் ஒதுக்கியதில் என்ன கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன? என்பது குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.
 

http://onelink.to/nknapp

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வு, இந்தியா முழுவதும் ஐ.சி.எம்.ஆர். திட்டத்தைத் தவிர்த்து அணுசக்தி துறை, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (CSIR), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO), பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் உள்ள பிசிஆர் ஆய்வகங்களின் எண்ணிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை மே 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்