கரோனா பரவலின் இரண்டாவது அலை சில மாநிலங்களில் துவங்கியிருப்பதாக மத்திய, மாநில சுகாதாரத் துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்களைக் கொடுத்திருக்கிறார். மத்திய, மாநில அரசுகள், கரோனா பரவல் அதிகரித்து வருவதாகத் திடீரென சொல்வதையறிந்து, 'தமிழகத்தில் தேர்தலை ஒத்தி வைக்கும் யுக்தியா, இது?' என்கிற சந்தேகம் அரசியல் கட்சிகளிடத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹூ, "பீஹார் சட்டமன்றத் தேர்தலின் போது 12 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு கரோனா பரவியிருந்தது. அப்படிப்பட்ட காலத்திலேயே அங்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பீஹார் போல தமிழகத்தில் அதிகரிக்கவில்லை. கரோனா பரவல் அதிகரித்து வருவதை வைத்துத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது பற்றி நாங்கள் ஆலோசனை நடத்தவில்லை. தேர்தலைப் பாதுகாப்பாக நடத்துவது பற்றி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று அரசியல் கட்சிகளிடத்தில் இருக்கும் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சத்யபிரதாசாஹூ.