Skip to main content

கரோனா இருக்குமோ எனப் பயந்து துபாயில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தமிழக இளைஞர் 

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

kallakurichi district




கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ளது சின்ன மாம்பட்டு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது சகோதரர் அய்யனார் உடன் கடந்த 4 ஆண்டுகளாக துபாயில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் மணிகண்டனுக்கும் குதிரைசந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த மணிகண்டன் மீண்டும் துபாய்க்கு பணிக்குச் சென்றுவிட்டார். 
 

சமீபத்தில் கரோனா நோய்ப் பரவல் உலகின் பல நாடுகளிலும் பரவியுள்ளது. இது துபாயிலும் பரவியுள்ளதால் இதைக்கண்டு பயந்துபோன மணிகண்டன், சில நாட்களாகவே எனக்கு கரோனா நோய் வந்துவிடுமோ என்று அச்சப்பட்டு புலம்பிக் கொண்டு இருந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தனக்கு நோய் வந்து விட்டதாகவே அங்கிருந்த நண்பர்களிடம் கூறியுள்ளார். அங்கிருந்து அவரது சகோதரர் அய்யனார், மணிகண்டன் பயந்து பீதியில் உளறுகிறார் என்பதைப் புரிந்து கொண்டதோடு, மணிகண்டனுக்கு  தைரியத்தையும், ஆறுதல் வார்த்தைகளையும் கூறியதோடு அங்கு உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த மருத்துவர்களிடம் மணிகண்டனுக்கு கரோனா நோய் வந்துவிடுமோ என்ற பயம் உள்ளது. எனவே இவருக்குப் பரிசோதனை செய்யுமாறு கூறியுள்ளார்.
 

அதையடுத்து அங்குள்ள மருத்துவர்கள் மணிகண்டனுக்குப் பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவில் கரோனா நோய் அவருக்கு இல்லை என்று மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளனர். அந்தச் சான்றிதழை அங்கிருந்து தங்களது பெற்றோருக்கு அனுப்பி, இங்குள்ள மருத்துவர்களிடம் காண்பித்து அவர்கள் கூறும் விபரங்களை மணிகண்டனிடம் கூறுமாறு அய்யனார் பெற்றோர்களுக்குத் தெரிவித்துள்ளார். 
 

அதன்படி மணிகண்டனின் பெற்றோர்கள் அந்த மருத்துவ அறிக்கையைக் கள்ளக்குறிச்சியில் உள்ள மருத்துவர்களிடம் காண்பித்த போது அவர்களும் கரோனா நோய்க்கான அறிகுறிகள் மணிகண்டனுக்கு  சுத்தமாக இல்லை. அவரை தைரியமாக இருக்கச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.
 

இந்தத் தகவலை மணிகண்டனுக்கு அவரது பெற்றோர்கள் செல்போன் மூலம் எடுத்துச் சொல்லி தைரியமூட்டி உள்ளனர். அப்படி இருந்தும் ஒரு நாள் அறையில் தங்கியிருந்த மணிகண்டனை திடீரென காணவில்லை. அவரது சகோதரர் அய்யனாரும் அவருடன் அறையில் இருந்த நண்பர்களும் இரண்டு நாட்கள் தேடியும் மணிகண்டன் கிடைக்கவில்லை. மூன்றாவது நாள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாகத் தொங்கி உள்ளார். இதைக் கண்டு எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். கரோனா நோய் பயத்தின் காரணமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மணிகண்டனின் பரிதாப நிலையைக் கண்டு அவரது நண்பர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
 

http://onelink.to/nknapp

 

இதையடுத்து மணிகண்டன் உடலைத் துபாயிலிருந்து சரக்கு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அவரது ஊரான சின்னமாம்பட்டு எடுத்து வரப்பட்டது. அவரது உடலைப் பார்த்து அவரது இளம் மனைவியும். பெற்றோர்களும் கதறி அழுதனர். சில மணி நேரங்களிலேயே அவரது உடலை அடக்கம் செய்துவிட்டனர். மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டது அவரது உறவினர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

 

 

சார்ந்த செய்திகள்