சீனாவில் உருவான கரோனா வைரஸ், தற்போது 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக 21 நாள்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் மக்கள் இதை பொருட்படுத்தாமல், வைரஸூன் தாக்கத்தை உணராமல் இருசக்கர வாகனங்களில் வெளியில் சுற்றி வருகின்றனர். இவ்வாறு சுற்றுபவர்களுக்கு காவல்துறையினர் தரும் தண்டனைகள், சமூகவலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில் ஈரோட்டில் இன்று இப்படி ஜாலி விசிட் அடித்த இளைஞர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் அந்த இடத்திலேயே நிறுத்தி ஆளுக்கு 100 தோப்புக்கரணம் போடுங்கள் என தண்டனை வழங்கினார்கள். அந்த இளைஞர்கள் 100 தோப்புக்கரணம் போட்டு விட்டு காவல்துறையினரிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு வீடு திரும்பினர். இதேபோல வெள்ளோடு அருகே இளைஞர்கள் சிலர் காட்டுக்குள் கிரிக்கெட் விளையாட, அந்த இடத்தை கண்டுபிடித்த வெள்ளோடு காவல்துறையினர் அந்த கிரிக்கெட் மைதானத்திலேயே கிரிக்கெட் விளையாடிய 15க்கும் மேற்பட்ட இளைஞர்களை குட்டிக்கரணம், தோப்புக்கரணம் போடச்சொல்லி தண்டனை கொடுத்தனர். இன்னும் ஒரு சில இடங்களில் காவல்துறையினர் பெரிய பெரிய தடியை வைத்து இரு சக்கர வாகனத்தில் நிற்காமல் செல்லும் இளைஞர்கள் பின்னால் ஓங்கி அடித்தனர். இருந்த போதிலும் ஆபத்தை உணராமல் மக்கள் இன்னும் வெளியில் சுற்றத்தான் செய்கின்றனர். மக்களிடம் இந்த வைரஸ் குறித்து விழிப்புணர்வு வர வேண்டும் என்பதே அரசின் கோரிக்கையாக உள்ளது.