இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 900 கடந்துள்ளது. கரோனாவிற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 லிருந்து 50 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் நெருக்கடிகால மேலாண்மைக்குழு அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதியை பணிபுரியும் நிறுவனங்களே உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மீன், இறைச்சி மற்றும் காய்கறிக் கடைகளில் சமூக விலகல் கடைபிடிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.