கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக 144 தடையுத்தரவு நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் பெருவது தடை பட்டுவிடக்கூடாது என்பதற்காக அரசாங்கம் சில ஏற்பாடுகளை செய்து வீட்டை விட்டு வெளியே யாரும் வரக்கூடாது என அறிவிறுத்தியுள்ளது மத்திய – மாநில அரசுகள். அதனையும் மீறி 10 சதவித மக்கள் குறிப்பாக இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து ஊர் சுற்றிக்கொண்டு உள்ளனர்.
இதற்கிடையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் மக்களை பார்த்து ஆச்சயப்பட்டு போகிறார்கள் அப்பகுதி மக்கள். திருவண்ணாமலை - காஞ்சி சாலையில் இலங்கை அகதிகள் முகாம் சாலையோரமே உள்ளது. பாழடைந்த வீடுகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றன. வைரஸ் பரவலை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததும் இலங்கை அகதிகள் முகாம்மை சேர்ந்தவர்கள், தங்களது வீடுகளில் வீட்டுக்கு ஒரு பாலிஸ்டர் புடவையை வாங்கி அதை இணைத்து 300 மீட்டர் தூரத்துக்கு தங்களது குடியிருப்பை வெளியார் பார்வையில் இருந்து மறைத்துள்ளனர்.`
உள்ளேயுள்ள குடியிருப்பில் இருந்து வெளியே வரவும், வெளியில் இருந்து உள்ளே வரவும் ஒரு வழியை மட்டும் வைத்துள்ளனர். அந்த வழியையும் அடைத்து வைத்துள்ளனர். அனுமதியில்லாமல் யாரும் உள்ளே வரவும், வெளியே செல்லாதபடி கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். அந்த நுழைவாயிலில் இது 144 மற்றும் ஊரடங்கு உத்தரவால் இந்த ஏற்பாடு என நோட்டீஸ் ஒட்டிவைத்துள்ளனர்.
இதுக்குறித்து விசாரித்தபோது, இலங்கையில் இதுப்போல் பல ஊரடங்கு, 144 தடை உத்தரவுகளை பார்த்தவர்கள் நாங்கள். பல நோய்களுக்கு நாங்கள் ஆட்பட்டவர்கள். பிறரிடம் இருந்து நாங்கள் அங்கே விலகியிருக்க இந்த வழியைத்தான் பயன்படுத்துவோம். அதையே தான் இங்கும் செயல்படுத்தியுள்ளோம் என்கிறார்கள்.
இவர்கள் இந்தியாவுக்கு அகதியாக இங்கு வந்து பல ஆண்டுகளை கடந்துவிட்டாலும் பாதுகாப்பு என வரும்போது தன் நாட்டில் இருந்ததை மறக்காமல் இங்கே சுய பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்.
படஙகள் - எம்.ஆர்.விவேகானந்தன்.