சீன பயணிகள் இந்தியா வருவதற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், அனைவரையும் ஏமாற்றிவிட்டு ஹாயாக திரிந்த சீன வாலிபரை பிடித்து ராமேஸ்வரத்திலிருந்து மறுபடியும் சீனாவிற்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது இந்திய தூதரகம்.
கடந்த இரண்டு மாதங்களாக சீனா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை குறைந்தப்பாடில்லை. சீன நாட்டிலிருக்கும் பலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அருகிலுள்ள பல நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதனால் பல நாடுகள் தங்களுடைய நாட்டிற்கு சுற்றுலா வர சீனப் பயணிகளுக்கு தடைவிதித்துள்ள நிலையில், சீனாவும் தங்களுடைய மக்கள் வெளிநாடுகளுக்கு தடைவிதித்துள்ள நிலையில், பலர் அரசை ஏமாற்றிவிட்டு சுற்றுலா எனும் பெயரில் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர்.
இவ்வேளையில், தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உசிங்க் எனும் சீன வாலிபர் ஹாங்காங் பகுதியிலிருந்து கடந்த 28 ஆம் தேதி விமானம் மூலமாக கொல்கத்தா வந்து இறங்கி, அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு பயணமாகி பல்வேறு இடங்களுக்கு சென்றிருக்கின்றார். இறுதியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதிக்கு வந்திருந்த அவர் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இத்தகவல் விடுதியில் பணிபுரியும் ஊழியர்கள் மூலம் காவல்துறையினருக்கு தெரியவர, இதனையடுத்து தங்கும் விடுதிக்கு வந்த காவல்துறையினர், வட்டாட்சியர், நகராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறை மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட சீன வாலிபரிடம் விசாரணை நடத்தி, அவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதா.? என ஆய்வினையும் மேற்கொண்டனர்.
மருத்துவ பரிசோதனை முடிவுகளின் படி அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவர, இவ்வளவு பாதுகாப்பு உள்ள சீன வாலிபர் தமிழ்நாட்டில் ஹாயாக சுற்றித்திரியக் காரணமென்ன.? என்கின்ற கேள்வியுடன் உடனடியாக தனி வாகனம் மூலமாக போலீசார் மற்றும் மருத்துவக்குழுவினர் அவரை மதுரை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன்பின் மதுரையில் இருந்து ஹைதராபாத் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு இருந்து சீனாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது இந்தியத் தூதரகம் என்கின்றனர். விபரமறிந்தவர்கள். சீன வாலிபரின் ராமேஸ்வர வருகையால் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படடிருக்குமோ என பதட்டமடைந்துள்ளனர் அங்குள்ள மக்கள்.