நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் புதுச்சேரியிலும் தற்போது 6-ஆவது நாளாக ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களான மளிகை, காய்கறி, இறைச்சி ஆகியவற்றை வாங்க அரசு அனுமதி அளித்த போதும் கடைகளில் முக கவசம், கை கழுவுதல் ஆகியவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனால் புதுச்சேரி நேரு வீதியில் உள்ள குபேர் மார்க்கெட் என்கிற பெரிய மார்க்கெட்டில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கும் மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் முண்டியடித்துக்கொண்டும், முக கவசம் அணியாமலும் வாங்குகின்றனர். மேலும் கடைகளும் இடைவெளி விட்டு வைக்காமல் ஆங்காங்கே நெருங்கி வைத்துள்ளதால் நோய் தொற்று பரவும் விபரீத நிலை உள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை அடுத்து பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு செய்தார். அப்போது காய்கறி கடைகளை பார்வையிட்டார். நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள மார்க்கெட் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு காய்கறிகள் விலை குறித்தும், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது அவர், சமூக இடைவெளி இல்லாத கடைகள் இதுபோலவே இருந்தால் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார்.
தொடர்ந்து நெல்லிதோப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்கு கிருமி நாசினியை அவரே இயந்திரம் மூலம் தெளித்து, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, "கரோனாவால் உலகமே அதிர்ந்து இருக்கும் நேரத்தில் புதுச்சேரி மாநில மக்கள் தங்களை தனிமை படுத்திக்கொள்ளமல் தொடர்ந்து வெளியில் வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் 1124 பேர் தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநில மக்கள் தங்களின் உயிரைப் பற்றி கவலைப் படாமல் காய்கறி கற்றும் மாமிச கடைகளில் கட்டுக்கடங்காமல் கூடுகின்றனர். இதன் காரணமாக நேரக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் பெரிய மார்க்கெட்டில் அதிக அளவில் கூட்டம் கூடுவதால் நாளை (30.03.2020) முதல் பெரிய மார்க்கெட்டை தற்காலிகமாக மூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரிய மார்க்கெட் பகுதியில் இயங்கி வந்த கடைகளை நேரு வீதி, காந்தி வீதி, மிஷன் வீதி, அஜீஸ் நகர் மார்க்கெட், தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடி, செஞ்சி சாலை மார்க்கெட், காலாப்பட்டில் உள்ள அரசு பெண்கள் பள்ளி ஆகிய இடங்களில் குலுக்கல் முறையில் சில்லரை வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி தரப்படும். இதேபோல் மொத்த விற்பனை செய்யும் வியாபாரிகள் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் காய்கறிகளை இறக்கி சில்லறை வியாபாரிகளுக்கு பிரித்து கொடுக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.