கரோனாவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் வகையில், பிரதமர் மோடி ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 9 மணிக்கு அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளின் முன் விளக்கு ஏற்றவும், மாடிகளில் டார்ச் லைட் வெளிச்சத்தை காட்டுங்கள் என்றும் கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்துதான் இந்தியா முழுவதும் மக்கள் விளக்கு ஏற்றினர். அதேபோல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மக்கள் பிரதமர் மோடியின் வேண்டுகோளை கடைபிடித்து விளக்கு ஏற்றினர். அது போல் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் தங்கியிருப்பதால் தனது வீட்டின் முகப்பு முன்பு விளக்கு ஏற்றினார். அதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் மெழுகுவர்த்தி மூலம் தீபம் காட்டினார்கள்.
அதுபோல் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் நகரம் முதல் பட்டித் தொட்டிகள் வரை இருக்கக்கூடிய மக்கள், தங்கள் வீடுகளுக்கு முன்பு விளக்கு ஏற்றியும், மாடிகளில் செல்போன் மூலம் டார்ச் அடித்தும் கரோனா, கரோனா என குரல் கொடுத்தனர்.
இதேபோல் அந்தந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார்கூட மெழுகுவர்த்தி மூலம் தீபம் காட்டினார்கள். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்கள் ஆங்காங்கே தங்கள் வீடுகளுக்குமுன் வாசலிலும், வாசல்படிகளிலும் கார்த்திகை தீபம்போல் விளக்கு ஏற்றினர், பலர் வீடுகளின் மொட்டை மாடியில் குடும்பத்தோடு நின்று செல்லில் லைட் அடித்தும், மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி தீப ஒளி காட்டினர். அதுமட்டுமல்லாமல் தங்கள் வீடுகளில் உள்ள சிறு குழந்தைகள் முதல் இளைய சமுதாயம் வரையும்கூட வீட்டுக்கு முன் மெழுகுவர்த்தி ஏந்தியும், செல் லைட் மூலம் ஒளிவட்டம் போட்டும் கரோனாவை விரட்டுவது போல் குரல் கொடுத்து, தங்கள் மனதின் உணர்வுகளையும் வெளிப்படுத்தி காட்டினர்.