தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசிகள் முற்றிலும் தீர்ந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், மீண்டும் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்நிலையில், மதுரையில் மூன்று தினங்களுக்குப் பின்பு நேற்று (11.06.2021) மீண்டும் தடுப்பூசி போடும் பணி துவங்கியது.
இந்நிலையில், இன்று புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. நெல்லை மாவட்டம், பாளை அரசு மருத்துவமனையிலும் தடுப்பூசி போடும் முகாம் இன்று தொடங்கியது. இன்று நெல்லை மாவட்டத்திற்கு மொத்தம் 8,800 தடுப்பூசிகள் வந்துள்ளது. 7,800 கோவிஷீல்டு, 1,000 கோவாக்சின் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன. நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை 82 தடுப்பூசி மையங்கள் உள்ளன. கடந்த 10 நாட்களாக தடுப்பூசிகள் போடப்படாத நிலையில் இன்று அந்தப் பணிகள் துவங்கியுள்ளன. நெல்லை மாவட்டத்தில் இதுவரை 1,53,500 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று தடுப்பூசிகள் வந்ததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக காத்திருக்கின்றனர். நாளொன்றுக்கு 5,000 பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.