சென்னை வேளச்சேரியில் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''இதற்கு முன்பு எப்படி இருந்ததோ தெரியாது. ஒவ்வொரு சீர்திருத்தமும் செய்துகொண்டிருக்கிறோம். இதற்கு முன்னால் எல்லாம் மருத்துவர்கள் பணி நியமனம் என்பது அவுட்சோர்சிங் முறையில்தான் எடுத்தார்கள். அவுட்சோர்சிங் முறையில் எடுப்பதால் அதற்கென்று தனியார் நிறுவனங்கள் கமிஷனைப் பெற்றுக்கொண்டு, சரிபாதி தொகையைத்தான் சம்பளமாக தருவார்கள். ஆனால் இன்றைக்கு அந்த நிலை மாற்றப்பட்டு, நேரடியாக மாவட்ட ஆட்சியர்கள், கல்லூரி முதல்வர்கள் ஆகியோர் மூலமாக நேரடியாக மருத்துவர்களையும், களப்பணியாளர்களையும் பணிக்கு அமர்த்திக்கொள்ளலாம் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம். அதுமட்டுமல்ல மருத்துவர்களுக்கான பணியிட மாறுதல் என்பது மிக நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு பைசா கூட செலவு இல்லாமல் 'டிரான்ஸ்பரன்ட் டிரான்ஸ்ஃபர்' என்ற வகையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மருத்துவர்கள் பெரிய அளவில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். விரைவில் செவிலியர்களுக்கும் அதுபோன்ற கவுன்சிலிங் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் கரோனா கட்டுக்குள் இருக்கிறது.
உங்களுக்கு நன்றாக தெரியும். கடந்த முதல் அலையில் எல்லா கடைகளையும் மூடி இருந்தார்கள், மதுக்கடைகள் மட்டும் திறந்திருந்தன. இப்போதும் எல்லா கடைகளையும் மூடினார்கள், மது கடையும் மூடப்பட்டது. இதிலிருந்து இரண்டு ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் கரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மிக விரைவில் கரோனாவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்'' என்றார்.