கோயில் கலை நிகழ்ச்சியில் ஆபாசம் இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடனம் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதையடுத்து இதுபோன்ற விழாக்களில் இதுபோன்ற நடன நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த தடை உத்தரவை எதிர்த்து பல்வேறு கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் ரிட் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தனர். அந்த மனுக்களின் விசாரணை நீதிபதி மகாதேவன் முன்னிலையில் வந்தது.
அப்போது கோவில் நிர்வாகிகள் தரப்பில், தாங்கள் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். வேறு எந்த நிகழ்ச்சியையும் நடத்தப்போவதில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகள் காலம் காலமாக நடந்து வருகிறது. இதில் ஆபாசம் எதுவும் இல்லை என்று வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, திருவிழா என்றால் வில்லுப்பாட்டு, கிராமியப் பாட்டுகள் ஏற்கனவே நடந்தது. ஆனால் இப்போது பல நடனங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கோவில் விழாக்களில் கலாச்சார நிகழ்ச்சி நடந்ததால் உள்ளூர் போலீசார் வீடியோ பதிவு செய்ய வேண்டும். அதில் ஆபாசம் இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும், அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார்.