திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, பழைய மருத்துமவனை, வந்தவாசி, ஆரணி அரசு மருத்துவமனை, செய்யார் பாலிடெக்னிக், ஆரணி அண்ணா பல்கலைழக பொறியியல் கல்லூரி, ரங்கமால் தனியார் மருத்துவமனை, எஸ்.கே.பி பொறியியல் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக் என சில இடங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மருத்துவ சிகிச்சை அளிக்கிறது.
தனியார் மருத்துவமனை ஒன்று மருத்துவமனையின் ஒரு பகுதியை (சுமார் 80 பெட்கள் கொண்ட அரங்கம்) மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியுள்ளது. அங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, அரசு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
அந்த மருத்துவமனையின் மற்ற பகுதிகள் தனியாகக் கரோனா நோயாளிகளுக்கு கட்டண சிகிச்சை அளிக்கும் மையமாக இருக்கிறது. இந்தத் தனியார் மருத்துவமனைக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவச மையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பப்படும் கரோனா நோயாளிகளிடம், எங்கள் மருத்துவமனையில் தனியாக சிகிச்சை அளிக்கிறோம், இங்கே சேர்ந்தீர்கள் என்றால், சிறப்பான சிகிச்சை அளிக்கிறோம் என மருத்துவமனை நிர்வாகம் பேசுவதாகக் கூறப்படுகிறது. தினசரி 3 ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய், 8 ஆயிரம் ரூபாய் பேக்கேஜ் என்கிற பெயரில் ரூம்கள் ஒதுக்கப்பட்டு அங்கு கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். வசதியானவர்கள், பிரபலமானவர்கள் அங்கே சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள்.
மருத்துவமனையில் சேர்ந்த பின்பு எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்கிற குரல்கள் வெளியாகின்றன. இதுப்பற்றி நம்மிடம் பேசியவர்கள், கரோனா தடுப்புப் பணியில் நண்பர் பணியாற்றுகிறார். அவரது மனைவி, மகளுக்கு கரோனா என உறுதியாகி திருவண்ணாமலை நகரத்தில் இருந்து மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் செயல்படும் இலவச மருத்துவ முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். 108 ஆலம்புலன்ஸ் விட்டு கீழே இறங்கியதுமே அந்த மருத்துவமனை நிர்வாகி, எங்களிடம் சிறந்த சிகிச்சை கிடைக்கும், தனி ரூம், டாய்லட் வசதி நன்றாக இருக்கும், நல்ல உணவு தருகிறோம் எனப் பேசி தினசரி 5 ஆயிரம் ரூபாய் விலையில் ரூம் ஒதுக்கி அட்மிட் செய்தார்.
10 நாள் சிகிச்சைக்கு பின்பு, அம்மா, மகள் இருவருக்கும் ஒரேநாளில் ஒரேநேரத்தில் ஸ்வாப் டெஸ்ட் எடுத்தார்கள். அம்மாவுக்கு மறுநாள் டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. அவர்களது 8 வயது மகளுக்கு ரிசல்ட் வரவில்லை. மகளுக்கு ஏன் வரவில்லை எனக் கேட்டபோது, எங்களுக்குத் தெரியாது என்றார்களாம். 8 வயது மகளை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி வெளியே போவது எனத் தாயார் கேட்டபோது, ரிசல்ட் வரும் வரை நீங்களும் இருங்க, ஆனா அதுக்குப் பணம் கட்டவேண்டும் எனச் சொல்லியுள்ளார்கள். 3 நாட்களுக்குப் பிறகு ரிசல்ட் வர, 15 ஆயிரம் ரூபாய் கூடுதலாக பணம் வாங்கிக்கொண்டு டிஸ்சார்ஜ் செய்துள்ளார்கள்.
ஒரேநாளில், ஒரேநேரத்தில் அம்மா, மகளுக்கு டெஸ்ட் எடுக்க, அது எப்படி ஒருவருக்கு மட்டும் ரிசல்ட் வரும்? திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்ய தனியார் ஆய்வகத்துக்கு அனுமதி கிடையாது, அரசு ஆய்வகங்கள் தான் அதற்கான உரிமையைப் பெற்றுள்ளன. இவர்களும் அரசு ஆய்வகத்தில் தான் டெஸ்ட் செய்தார்கள். அம்மா, மகள் இருவருக்கும் டெஸ்ட் ரிசல்ட் வர எப்படித் தாமதமாகும்? வந்த ரிசல்ட்டை வெளிப்படுத்தாமல் பணம் வசூலிக்க திட்டமிட்டு இப்படிச் செய்தார்களா எனக் கேள்வி எழுப்பினார்.
திருவண்ணாமலை நகரின் முக்கிய அமைப்பு ஒன்றின் பிரமுகர் கரோனா பாதிப்பால் சில தினங்களுக்கு முன்பு இறந்தார். அவரது மனைவி தற்போது அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவர் ஹெல்த் இன்சூரன்ஸ் செய்துள்ளார். என்னிடம் பணம்மில்லை இன்சூரன்ஸ் க்ளைம் செய்துக்கொள்ளுங்கள் எனச் சொன்னபோது, முடியாது, பணத்தை நீங்க கட்ட வேண்டும் எனக் கெடுபிடி செய்துள்ளார். மருத்துவமனையில் நாம் உள்ள நிலையில் இதுப்பற்றி வெளியே சொன்னால் பிரச்சனையாகிவிடுமோ என தவிக்கிறார்கள் அந்தக் குடும்பத்தார்.
ஒரு தொண்டு நிறுவனத்தின் குடும்பத்தார் அதே தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட, அவர்களிடமும் பண வசூல் வேட்டை நடத்தியதாக அந்தத் தொண்டு நிறுவன நிர்வாகி மனம் குமைந்துகொண்டுள்ளார்.
இப்படித் தொடர்ச்சியாக அந்தத் தனியார் மருத்துவமனை மீது புகார்கள் அதிகரிக்கின்றன. மாவட்ட நிர்வாகம், அரசின் கரோனா சிகிச்சை மையம் என அங்கே அனுப்பிவைக்கிறது. அப்படி வருபவர்களிடம், எங்களிடம் வாங்க சிறப்பான சிகிச்சை எனச் சொல்லி அட்மிட் செய்து, பயத்தை மூலதனமாக்கி ஏமாற்றி கொள்ளையடிக்கிறது என்கிற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
திருச்சியில் கரோனா டெஸ்ட் ரிசல்ட்டில் குளறுபடி செய்து பணம் சம்பாதித்தது தெரியவந்ததும், பிரபலமான ஆய்வகத்தை மாவட்ட நிர்வாகம் மூடி சீல் வைத்துள்ளது. சென்னையில் சில தனியார் மருத்துமவனைகள் மீது அதிக கட்டணம் வசூலித்த குற்றச்சாட்டு வெளிப்படையாக வந்து விசாரணை நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.