தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து இன்றைய கரோனா நிலவரம் குறித்து பேட்டியளித்தார். அப்போது பேசுகையில்,
மிகப்பெரிய வல்லரசு நாடுகளையே உலுக்கிக் கொண்டிருக்கும் கண்ணுக்கு தெரியாத இந்த கரோனா வைரஸை கட்டுப்படுத்த உயிரை கொடுத்து போராடி வருகிறோம். மின்னல் வேகத்தில் பரவும் கரோனாவை அரசு கட்டுப்படுத்தி வருகிறது. அதிக எண்ணிக்கையில் பரிசோதனை செய்வதால் அதிக பாதிப்பு பதிவாகிறது. கரோனாவில் அரசியல் செய்ய வேண்டாம் அரசு வெளிப்படையாக உள்ளது.
இன்று தமிழகத்தில் 1,843 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,789 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மற்றவர்கள் பிற மாநில மற்றும் நாடுகளிலிருந்து வந்தவர்கள். இதனால் தமிழகத்தில் 18 ஆவது நாளாக கரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று 18,103 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல் இதுவரை தமிழகத்தில் 46,504 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் 20,678 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பு என்பது இதுவரை 33,744 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 1,257 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையிலும் 13 வது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 26,344 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 797 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இன்று அறிவிக்கப்பட்டுள்ள உயிரிழப்புகள் எண்ணிக்கை 44, அரசு மருத்துவமனையில் 32 பேரும், தனியார் மருத்துவமனையில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழக இதில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 16வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இன்று வேறு எந்த நோய் பாதிப்பும் இல்லாத 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.