தமிழகத்தில் பரவலாக குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாக சற்று அதிகரித்து பதிவாகி வருகிறது. இந்நிலையில் அனைத்து மருத்துவமனைகளிலும் 50 முதல் 100 படுக்கைகளை கோவிட் சிகிச்சைக்காக தயாராக வைத்திருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் கடந்த 18 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களை தொலைபேசி மூலமாக தினசரி உடல்நிலை குறித்துக் கேட்க வேண்டும், லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிங்க், பாராசிட்டமால், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வேலூரில் கரோனா பரவலைத் தடுக்க அம்மாவட்டத்தின் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அதன்படி, வேலூரில் பெரிய வணிக வளாக கடைகளில் ஏ.சி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகள் நடக்கும்பொழுது திருமண மண்டபங்களில் 100 பேர் மட்டுமே இருக்க வேண்டும்.அதனை மாநகராட்சி ஊழியர்கள் உறுதி செய்யவேண்டும். துக்க நிகழ்ச்சிகளில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்க அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.