தமிழகத்தில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் அடைக்க உத்தரவிடப்பட்டு நடைமுறையிலும் உள்ளது. அதேவேளையில், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், கரோனா பரவலை மனதில் கொண்டு மேலும் அதனைப் பரவவிடாமல் இருக்க, திருச்சி மாவட்ட மீன் மொத்த வியாபார நலச் சங்கம் சார்பில் நேற்று (19.05.2021) வெளியிட்ட அறிக்கையில், திருச்சி காசிவிளங்கி சந்தை முழுவதுமாக அடுத்த 10 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்றுமுதல் 30ஆம் தேதிவரை தொடர்ந்து 10 நாட்களுக்கு மீன் மார்க்கெட் முழுமையாக மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மொத்த வியாபாரிகள் வேறு எந்த இடத்திலும் மீன் விற்பனை செய்யக் கூடாது என்றும், மீறி வேறு இடங்களில் மொத்த வியாபாரம் செய்தால் சங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினால், மீன் விற்பனையாளர்களுக்கு இந்தப் பத்து நாட்களில் சுமார் 4 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.