ஈரோடு மாநகர் பன்னீர்செல்வம் பார்க் அருகில் தனியாக ஜவுளி சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு 400-க்கும் மேற்பட்ட தினசரி கடைகள், 350க்கும் மேற்பட்ட வாரச் சந்தைகள் என 750 கடைகள் செயல்பட்டு வந்தன. குறிப்பாக ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஜவுளி சந்தை உலக புகழ் பெற்றது. நேபாளம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, கோவா, பீகார் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் அதிகளவில் இந்த ஜவுளி சந்தைக்கு வருவது வழக்கம்.
அதேபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஜவுளி வியாபாரிகள் வாரச் சந்தைக்கு வருவதும் வழக்கம். இதனால் ஜவுளி சந்தை நடைபெறும் நாளில் இந்த பகுதி விழாக்கோலம் போல் காட்சியளிக்கும். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்பட விசேஷ நாட்களில் ஜவுளி சந்தைகளில் ஒவ்வொரு நாளும் ரூபாய் 3 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். சாதாரண நாட்களில் ரூபாய் 1 கோடி வரை வியாபாரம் நடக்கும். ஜவுளித் தொழிலை நம்பி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். போன வருடம் ஏற்பட்ட கரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஜவுளி கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
இதனால் ஆயிரக்கனக்கான ஜவுளி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். பின்னர் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்ப தொடங்கியதால் ஜவுளி சந்தை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்து உள்ளதால் மீண்டும் ஜவுளி கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் கடந்த மே மாதம் 7ஆம் தேதி முதல் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட இரண்டு மாதமாக ஜவுளி கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் இதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து ஜவுளி தொழிலாளர்கள் மாற்று யோசனையாக வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் கட்டிட வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
இது குறித்து ஈரோடு கனி மார்க்கெட் வாரச் சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறும்போது, "கரோனா தாக்கம் காரணமாக மே மாதம் 7ஆம் தேதி முதல் ஜவுளி சந்தை அடைக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி வர்த்தகம் முடங்கிப் போயுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு மாதமாக ஜவுளி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளதால் இதனை நம்பி உள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த இடத்தை ஜவுளி தொழிலாளர்கள் பல்வேறு கூலி தொழிலுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் பலர் கட்டிட வேலைக்கும், செங்கல் சுமப்பதற்கும், சித்தாள் வேலைக்கும் சென்று வருகின்றனர். தினமும் ரூபாய் 200 முதல் ரூ. 500 வரை அவர்களுக்கு கூலி கிடைக்கிறது . விரைவில் ஜவுளி சந்தை திறக்க அனுமதித்தால் மட்டுமே பிழைக்க முடியும். கடந்த ஆண்டு ஊரடங்கின் போது இ.எம்.ஐ செலுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை சலுகை இல்லை. ஜவுளித் தொழிலை நம்பியுள்ளவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
கரோனா ஊரடங்கால் பசியை போக்க கிடைக்கும் வேலைக்கு செல்லத் தொடங்கி விட்டனர் உழைக்கும் சமூகம்.