தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 4,538 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை என்பது 1,60,907 ஆக அதிகரித்தது. கரோனாவை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஜூலை மாதம் முடியும் வரை வரும் ஞாயிற்று கிழமைகள் மாநிலம் முழுவதும் முழுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ளது தமிழக அரசு.
தொடக்கத்தில் சென்னையில் பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், தற்போது கரோனா பாதிப்பு என்பது பிற மாவட்டங்களிலும் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக, 3,295 பேருக்கு கரோனா ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தென்காசி, சங்கரன்கோவிலில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் அங்கு 60 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி, சங்கரன்கோவிலில் 20-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.