Skip to main content

கரோனா நிவாரண நிதி கொடுத்த மாற்றுத்திறனாளிகள்!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

Corona Relief Fund - Erode


கரோனா என்ற கண்னுக்குத் தெரியாத வைரஸ் கொடியவன், தொடர்ந்து உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறான். இந்தியாவில் கரோனா ஊடுருவி அதன் தாக்கம் தமிழகத்திலும் கடுமையாக எதிரொலித்து வருகிறது. இதனால் ஏராளமான தொழில்கள் முடங்கின. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி அவதிக்குள்ளாகியுள்ளார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளை, யானை பசிக்கு சோளப்பொறி போல் செய்து வருகிறது, அரசு.
 


இதற்கிடையில் பொது மக்களும் முதலமைச்சர் பொது நிவாரணத்துக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று பலர் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை அரசிடம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோட்டில் மாற்றுத் திறனாளிகளான இரட்டையர்கள் கரோனா நிவாரணத்துக்காகத் தாங்கள் இரண்டு வருடமாகச் சேர்த்து வைத்திருந்த பணத்தை நிதி உதவியாக அளித்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு நகர்ப் பகுதியில் உள்ள அதியமான் தெருவைச் சேர்ந்தவர் காதர்.  இவரது மகள் பசிகா நிஷா, மகன் ஸ்ரீநாத் அலி இருவரும் இரட்டையர்கள். இவர்களுக்கு 16 வயதாகிறது. பிறவியிலிருந்தே இவர்கள் மாற்றுத்திறனாளிகள். இருவரும் சிறப்புப் பள்ளி மூலம் பத்தாம் வகுப்புப் பயின்று வருகிறார்கள்.

இந்நிலையில் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்து வந்தனர். இவர்களும் கரோனா நிதி வழங்க முடிவு செய்தனர். அவர்கள் தாங்கள் இரண்டு வருடமாகச் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கரோனா நிவாரணத் தொகையாக அளிக்க, இன்று 8ஆம் தேதி காலை அவர்களது தந்தையுடன் ஈரோடு சம்பத் நகரில் உள்ள கலெக்டர் முகாம் அலுவலகத்திற்குச் சென்று கலெக்டர் கதிரவனை சந்தித்துப் பணத்தைக் கொடுத்தனர். அதில் எவ்வளவு பணம் உள்ளது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இருந்தாலும் உதவி செய்ய வேண்டும் என்ற அவர்களின் நல்ல எண்ணத்தை மாவட்ட கலெக்டர் கதிரவன் மிகவும் பாராட்டி வாழ்த்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்