இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை குறையாமல் இருந்து வருகிறது.
குறிப்பாக, முதல்வர்கள், ஆளுநர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டவர்களுக்கும் தற்போது அடிக்கடி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. லேசான பாதிப்பு இருக்கும் பொதுமக்கள் பலர் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே தமிழகத்தில் இதன் பாதிப்பு கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நேற்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து பதிவானது. மேலும் 40 பேர் கரோனா தொற்று காரணமாக பலியானார்கள். தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், இந்தியாவில் அடுத்த 14 நாட்களுக்குள் கரோனா உச்சம் அடையும் என்று சென்னை ஐஐடி பகுப்பாய்வு வெளியிட்டுள்ளது. எனவே அடுத்த இரண்டு வாரங்கள் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.