உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 13 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்திலும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தமிழகம் பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை. மருத்துவம் போன்ற அவசரத் தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். விமானம், ரயில் நிலையங்களுக்குச் செல்ல மட்டும் இரவு நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்ல இ-பாஸ் வாங்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
இந்நிலையில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் செல்பவர்களுக்கு 'கரோனா நெகட்டிவ்' எனப் போலிச் சான்றிதழ் தயாரித்துக் கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி பர்கூரில் வெளிநாடு, வெளிமாநிலம் செல்லும் நபர்களுக்கு கரோனா நெகட்டிவ் எனப் போலிச் சான்றிதழ் தயாரித்துத் தருவதாக வெளியான புகாரில் தினேஷ் என்ற இளைஞர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.