கரோனா நோய்த் தொற்று உள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மிக மிகக் குறைவாக இருந்தார்கள். சரியாக 15 பேர் மட்டும்மே இருந்தார்கள். அதில் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். 4 பேர் மட்டுமே மருத்துவமனையில் இருந்தனர்.
ஏப்ரல் இறுதியில் சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்த கூலித் தொழிலாளர்கள், சென்னையில் அடிதட்டு மக்களாக வேலை செய்பவர்கள் பலர் கூட்டம் கூட்டமாக திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். அப்படி வருகை தந்தவர்கள் சுமார் 1,200 பேரை மாவட்ட எல்லைகளில் தடுத்து நிறுத்தி அவர்களைத் தனிமைப்படுத்தி தங்க வைத்து பரிசோதனை செய்ய தொடங்கியபின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர தொடங்கியது.
அதன்பின் கிராம அளவில் பாதுகாப்பு கமிட்டி உருவாக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர், துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர் என 5 பேர் கொண்ட கமிட்டி அமைத்து, மே 1ஆம் தேதியில் இருந்து வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பற்றிய தகவலை உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கிராம அளவில் செய்யப்பட்ட விழிப்புணர்வு பெரிய அளவில் மாவட்ட நிர்வாகத்துக்குப் பயனுள்ளதாக இருந்தது.
எல்லைகளில் காவல்துறையை ஏமாற்றிவிட்டு தங்களது சொந்த ஊருக்கு வந்து அடைக்கலமானவர்களை, அக்கம் பக்க பொதுமக்களே ஊராட்சி நிர்வாகத்துக்குத் தகவல் சொல்லி, மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் அனுப்பினர். சுகாதாரத் துறையினர் உடனடியாக அவர்கள் பற்றிய தகவல்களைப் பதிவு செய்துகொண்டு, அவர்களைத் தனிமைப்படுத்த துவங்கினர்.
அதன்படி மே 16 ஆம் தேதி மாலை 5 மணி வரை வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,229 பேர் எனக் கண்டறியப்பட்டு அவர்கள் அனைவருக்கும் படு வேகத்தில் பி.சி.ஆர். டெஸ்ட் என்கிற கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அப்படிச் செய்யப்படுவதன் மூலம் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மே 17ஆம் தேதி கணக்குப்படி 151 கரோனா நோயாளிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளனர். அதில் 16 பேர் குணமாகி வீட்டுக்குச் சென்றுவிட மீதிப்பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்னும் டெஸ்ட் ரிசல்ட் வரவேண்டியது உள்ளது என்கிறார்கள் சுகாதாரத்துறையினர்.
நாளுக்கு நாள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே வருவதால் திருவண்ணாமலை மாவட்டத்தை ரெட் அலர்ட் பகுதியாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் நான்காம் கட்ட ஊரடங்கில் எந்தச் சிறப்புச் சலுகையும் இல்லாமல் 100 சதவிதம் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்றுள்ளது.