சென்னையிலிருந்து திரும்பியவர்களால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை காஞ்சிபுரத்தில் இருந்து ஏராளமானோர் தினந்தோறும் அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர். அவ்வாறு வரும் நபர்கள் பல மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையில் இருந்து பழனி திரும்பிய 4 பேருக்குக் கரோனா நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குபேர பட்டணத்தைச் சேர்ந்த ஒருவர் சக்தி கல்யாண மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒட்டன்சத்திரம் பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் சென்னையிலிருந்து திரும்பி வந்தார் அவருக்கு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கள்ளிமந்தையத்தைச் சேர்ந்த இரும்பு வியாபாரி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை ஒட்டன்சத்திரத்தில் 10 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தற்போது மீண்டும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி சீல் வைத்து அடைக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து திரும்பியவர்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஐந்து பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் இருந்து கொடைக்கானல் திரும்பிய பள்ளி மாணவிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால் அந்தப் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வட்டித் தொழில், காய்கறி வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். முறையான இ.பாஸ் இல்லாமல் சரக்கு வாகனங்களில், மோட்டார் சைக்கிளிலும், காய்கறி ஏற்றி வரும் லாரிகளிலும் சொந்த ஊருக்கு வருகின்றனர். இதில் பலர் மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்காமல் தங்கி வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எனவே மாவட்ட எல்லையில் சோதனையை அதிகப்படுத்தி வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களையும் சரக்கு வாகனங்களில் தங்கி வருபவர்களையும் போலீசார் கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.