கரோனா பலரையும் பலவாறாக மாற்றி இருக்கிறது. சிலர் தீய செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், பலர் நல்ல செயல்களை செய்து வருகிறார்கள். இப்படித்தான் மாணவிகளான, சகோதரிகள் தங்கள் பகுதியில் பனை மரங்களில் இருந்து பழுத்துக் கொட்டும் பனை விதைகளை சேகரித்து சென்னை வரை அனுப்பி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மாட்சிமை, உவகை. சகோதரிகளான இவர்களில் மாட்சிமை சென்னையில் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி. உவகை பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்காக விண்ணப்பித்துள்ள மாணவி.
தினசரி தங்கள் தந்தையுடன் தோட்டத்திற்கு சென்று தந்தைக்கு உதவியாக தோட்ட வேலைகள் செய்த பிறகு அவர்களின் தோட்டத்தின் ஓரத்தில் நிற்கும் பனை மரங்களில் இருந்து பழுத்து கொட்டும் பனை விதைகளை சேகரித்து வந்தனர். தங்களின் பனை விதை சேகரிப்பு குறித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் போட்ட நிலையில், சென்னை, தஞ்சை, தேனி, விருதுநகர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தொடர்பு கொண்டு தங்களுக்கும் பனை விதைகள் வேண்டும் என்று கேட்டு பார்சல்கள் மூலமாக பெற்று வருகின்றனர். இதுவரை ஆயிரம் விதைகள் அனுப்பியுள்ள நிலையில், சுதந்திர தினத்தில் நடவு செய்ய 3 ஆயிரம் விதைகள் கேட்டுள்ளனர். அந்த விதைகளை அனுப்பும் பணியில் மாணவிகள் தீவிரமாக உள்ளனர். மேலும் 11 ஆயிரம் விதைகள் வரை பலரும் கேட்டுள்ளனர், அதற்கான சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மாணவ சகோதரிகள் கூறும்போது, “இயற்கை மீது ஆர்வம் கொண்ட நாங்கள் மரங்கள் வளர்ப்பதை செய்து வருகிறோம். கரோனா விடுமுறை காலம் வீட்டில் அமர்ந்து பொழுது போக்குவதைவிட நிலத்தடி நீரை சேமிக்கும் பனை விதைகளை சேமிக்கலாம் என்று நினைத்தோம். சேகரிப்பை தொடங்கினோம். அதை சமூக வலைதளங்களில் பதிவிட்ட போது வரவேற்பு கிடைத்தது. பலரும் பனை விதை வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு பார்சல்கள் மூலம் அனுப்பி வருகிறோம். அதைபார்த்து மேலும் பலர் கேட்டுள்ளனர். சுதந்திர தினத்தில் மட்டும் நடவு செய்ய 3 ஆயிரம் விதைகள் கேட்டுள்ளனர். அவற்றை அனுப்பி வருகிறோம். மேலும் 11 ஆயிரம் விதைகள் வரை கேட்டுள்ளனர். அந்த விதைகளை சேகரித்து வருகிறோம். சேகரித்த விதைகளை சிகா.லெனின் தான் பார்சல் செய்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி உதவி செய்கிறார்.
இந்த கரோனா காலத்தில் வீட்டில் இருக்கும் அனைவரும் தற்போது கிடைக்கும் பனை, வேம்பு, புங்கன் போன்ற பல்வேறு வகையான விதைகளை சேகரித்து குளம், ஏரி, சாலை ஓரங்கள், பொது இடங்களில் விதைத்துவிட்டால் இன்னும் சில வருடங்களில் நிறைய மரங்களை உருவாக்க முடியும். அப்போது தான் இயற்கையோடு நாம் வாழ முடியும்” என்றனர்.