Skip to main content

தமிழகத்தில் 86 ஆயிரத்தை கடந்த கரோனா!!! 1,100-ஐ கடந்த உயிரிழப்பு...

Published on 29/06/2020 | Edited on 29/06/2020
 Corona exceeds 86 thousand in Tamil Nadu

 

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 37,337 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் ஒரே நாளில் 2,167 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக சென்னையில் கரோனா பாதிப்பு ஒரே நாளில் 2,000 என்ற அளவை இன்று கடந்து இருக்கிறது. இதனால் சென்னையில் ஒட்டுமொத்தமாக 55,989 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 2,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 47,749 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 11 லட்சத்து 40 ஆயிரத்து 441 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்புகள்படி, இன்று ஒரே நாளில் 62 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனையில் 44 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். 50 வயதுக்கு உட்பட்டோர் 15 பேர் கரோனா  பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். வேறு நோய் தொற்று பாதிப்பு இல்லாத 11 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். சென்னையில் தனியார் மருத்துவமனையில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தஞ்சை அரசு மருத்துவமனையில் புதுக்கோட்டை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 26 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் 30 ஆவது நாளாக இரட்டை இலக்கத்தில் கரோனா உயிரிழப்பு என்பது தொடர்ந்து வருகிறது.

அதிகபட்சமாக சென்னையில் 846 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் மட்டும் 1,700 க்கும் மேற்பட்டோர் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல், தருமபுரி, பெரம்பலூர் மாவட்டங்களில் புதிதாக தொற்று ஏதும் பதிவாகவில்லை.

மதுரையில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,201 ஆக அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் 591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 202 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,253 ஆக அதிகரித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் இன்று 37 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஒட்டு மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,040 ஆக அதிகரித்துள்ளது. கடலூரில் 640 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் இன்று 191 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த எண்ணிக்கை 3,715 ஆக இருக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்