தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மாவட்டங்களுக்கு ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டு, கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் ஊரடங்கு பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்குக்கு பிறகு சில நாட்களாக தமிழகத்தில் பதிவாகி வரும் கரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வந்தாலும் கோவையில் பாதிப்பு மிக அதிகமாகவே உள்ளது. குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 7 ஆம் தேதி கரோனா சிறப்பு தடுப்பு கண்காணிப்புகளுக்காக மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்திருந்தார். இந்நிலையில் கோவையில் ஒருநாள் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,692 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் தொடர்ந்து தோற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலையில், கரோனா தடுப்பு பணிகளுக்காக மேலும் மூன்று மாவட்டத்திற்கு கூடுதல் அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கூடுதலாக ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு-நிர்மல்ராஜ், சேலம்-முருகேஷ், திருப்பூர்-கணேசன் ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.