கோப்புக்காட்சி
சேலத்தில் உள்ள ஒரு பிரபலமான திரையரங்க கேண்டீனில் பூச்சிகள் செத்து மிதந்த பாலையும், காலாவதியான குளிர்பானங்களையும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பிரபலமான சினிமா திரையரங்க கேண்டீனில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் கிளம்பின. இதையடுத்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சிவலிங்கம் தலைமையிலான குழுவினர் அந்த கேன்டீனில் திடீர் சோதனை நடத்தினர்.
குளிர்பானங்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி விவரங்கள் இல்லாதது தெரிய வந்தது. அங்கிருந்த பால் சுகாதாரமான முறையில் இல்லாததோடு, பாலில் பூச்சிகள் செத்து மிதந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்ததுடன், அங்கேயே கீழே கொட்டி அழித்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாத்துறை அலுவலர்கள் கூறுகையில், ''சினிமா பார்க்க வந்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் இந்த சோதனை நடந்தது. சுகாதாரமான முறையில் இல்லாத 5 லிட்டர் பால், குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு, உணவு பகுப்பாய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும்,'' என்றனர்.