திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான மக்களும் தரிசனத்துக்காக வருவார்கள்.
கரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் வழிபாட்டுத் தலங்கள் மூடப்படும் என்ற அரசின் உத்தரவை ஏற்று அண்ணாமலையார் கோவில் மூடப்பட்டது. ஆனால் ஆகம விதிப்படி, கோயிலுக்குள் தினமும் அனைத்து விதமான பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்று வந்து கொண்டு உள்ளன.
இந்தக் கோயிலின் பூஜை குருக்களாக இருக்கும் முக்கிய சிவாச்சாரியார் ஒருவருக்கு கரோனா நோய் வந்துள்ளது என தெரியவந்துள்ளது. கோயிலின் முக்கிய குருக்களான அவர் அரசியல் மற்றும் தொழில் அதிபர்களுக்கு மிக வேண்டப்பட்டவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனது மகனின் மாமனார் வீட்டுக்கு குடும்பத்துடன் ஒரு திருமண விழாவிற்காக சென்று வந்துள்ளார்.
அப்படி சென்று வந்தவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் குடும்பத்தில் உள்ள சிலருக்கும் தொற்று என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நாம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் இணை ஆணையர் ஞானசேகரனிடம் கேட்டபொழுது, அவர் டெஸ்ட் செய்துள்ளார் இன்னும் ரிசல்ட் வரவில்லை, அவர் கோயிலில் தினமும் வந்து பூஜை செய்வதில்லை அவரது மகன்தான் வந்து பூஜைகள் செய்வார், அவரும் கடந்த சில தினங்களாக கோயிலுக்குள் வரவில்லை என்றார்.
தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்த சிவாச்சாரியார்தான் தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் நடத்தப்பட்ட அர்ச்சகர் பள்ளியில் ஆசிரியராக இருந்த பிராமணர் ஒருவரை அடித்து காயப்படுத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டிய நபர்களில் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.