நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பர்லியாறு என்ற இடத்திற்கு அருகே சுற்றுலா பேருந்து ஒன்று நேற்று (30-9-2023) மாலை 6 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. கடந்த 28 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திலிருந்து புறப்பட்டு உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று தென்காசிக்குத் திரும்பிச் செல்வதற்காகப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு சார்பில் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கிய பேருந்தை 50 அடி பள்ளத்திலிருந்து மீட்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. சுமார் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு 3 ராட்சத கிரேன் உதவியுடன் விபத்தில் சிக்கிய பேருந்து மீட்கப்பட்டது. முன்னதாக குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. அதே சமயம் குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலைக்குப் பதிலாக கோத்தகிரி வழியாக வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.