வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்துவரும் நிலையில், நான்கு மாவட்டங்களில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 1,022 ஏரிகளில் 806 ஏரிகள் 100% நிரம்பியுள்ளதாக தமிழ்நாடு பொதுப்பணித் துறை தகவல் வெளியிட்டுள்ளது. 179 ஏரிகள் 75 சதவீதமும், 47 ஏரிகள் 50 சதவீதம் அளவிற்கும் நிரம்பியுள்ளதாகப் பாலாறு வடிநில கோட்ட பொதுத் துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 267 ஏரிகளும், செங்கல்பட்டில் 444 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 76 ஏரிகளும், சென்னையில் 16 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை மொத்தம் உள்ள 381 ஏரிகளில் 267 ஏரிகள் 100 சதவீதமும், 72 ஏரிகள் 75 சதவீதமும், 40 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகளில் 444 ஏரிகள் 100 சதவீதமும், 89 ஏரிகள் 75 சதவீதமும், 5 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன. திருவண்ணாமலையில் உள்ள 93 ஏரிகளில் 76 ஏரிகள் 100 சதவீதமும், 17 ஏரிகள் 75 சதவீதமும் நிரம்பியுள்ளன. சென்னையில் உள்ள 16 ஏரிகளில் 16 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.