திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமான அண்ணாநகர் எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்திக் உள்ளிட்டோரின் பங்களா மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரின் அதிரடி ரெய்டுகள் நடந்து வருகின்றன. காலை எட்டு மணிக்கு தொடங்கிய வருமான வரிசோதனை ஒன்பது மணிநேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், சோதனை நடைபெற்று வரும் வீட்டிற்கு அருகிலேயே திமுக எம்பிக்கள் நெல்சன், என்.ஆர்.இளங்கோ, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். சட்ட ரீதியாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
''ஏற்கனவே ரெய்டுகள் மூலம் அதிமுக அரசையும் அதன் தலைவர்களையும் உருட்டி, மிரட்டி வைத்திருக்கிறார் மோடி. அதிமுக தலைவர்களை மிரட்டுவது போல என்னை மிரட்ட முடியாது. நாங்கள் திமுக. நான் கலைஞரின் மகன். இந்த சலசலப்புக்கெல்லாம் பயப்பட மாட்டேன். மிசாவையே பார்த்தவன். எமர்ஜென்சியைப் பார்த்தவன். நீங்கள் எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்'' என நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.