தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இரண்டு நாட்களுக்குத் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் அடுத்த நான்கு நாட்களுக்கு லட்சத்தீவு, கேரள கடலோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சேலம், நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இரு தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. வட உள் மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விருதுநகரில் தொடர் மழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் பிளவக்கல் பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவான 47 அடியில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 37 அடியாக உள்ளது.