தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி கடந்த சில தினங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மாவட்டங்களில் மழையின் தீவிரத்தைப் பொறுத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
சாலைகளிலும் பொது இடங்களிலும் மழைநீர் தேங்குவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதன் விளைவுகளைப் பற்றியும் அமைச்சர்கள், தொடர்ந்து அதிகாரிகளிடம் விசாரித்த வண்ணம் இருக்கின்றனர். மேலும் மழைநீர் வடிகால் பணிகள் நடந்த இடங்களில் நேரடி ஆய்வும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகமான மழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆகியோர் அறிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.