தமிழ்நாட்டில் பரவலாகக் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், 2வது நாளாக அரியலூரில் அதிகபட்சமாக 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருமானுரில் 7 சென்டி மீட்டர் மழையும், ஜெயம்கொண்டானில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
சீர்காழி அருகே கனமழையால் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சீர்காழி கூழையார் பெருமாள் கோயில் அருகே காற்றுடன் கனமழை பெய்ததால் மின்கம்பி அறுந்து விழுந்தது. அப்போது பைக்கில் கணவருடன் சென்ற லட்சுமி என்பவர் மீது மின்கம்பி உரசி மின்சாரம் தாக்கியது. மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த லட்சுமி, சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதேபோல் சேலத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் உள்ள இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக சாலைகளில் தடுப்புச் சுவர்கள், கற்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் ஏற்பட்ட மண்சரிவை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள இரண்டு நாட்களாகும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் ஏற்பட்ட மண்சரிவால் குப்பனூர் வழியாகப் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.