இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
எனினும், கரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில், டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருவது, நாட்டு மக்களை உலுக்கியுள்ளது.
இருப்பினும், அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிசெய்ய, எந்தெந்த மாநிலத்தில் ஆக்சிஜன் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறதோ அவை, ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள், ரயில்கள் மூலம் ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், ஆக்சிஜன் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விரைவாக மருத்துவமனைக்குச் செல்லவும், பாதுகாப்பாகச் செல்லவும், அந்த வாகனங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழக மருத்துவமனைகள் ஆக்சிஜன் தேவைக்கு 104 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (24/04/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கோவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் போன்ற கோவிட்- 19 சிகிச்சை அளிக்கும் இடங்களில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்திலுள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆக்சிஜன் கிடைப்பதை அதிகரிப்பதற்காக, மருத்துவ ஆக்சிஜனை ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரிகள் விரைவாக மருத்துவமனைகளை வந்தடைய, தேவைப்படும் இடங்களில் காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவற்றுக்கு மருத்துவ ஆக்சிஜன் வழங்கல் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்டரை அரசு ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையினை எதிர்கொள்கிற தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் உடனடியாக 104 என்ற எண்ணில் உதவிக்கு அழைக்கலாம்." இவ்வாறு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.