12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் குறித்து நாளை ஆலோசனை நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தீவிர தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மாணவர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்வு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி டெல்லியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியானது. சிபிஎஸ்இ அறிவிப்புக்குப் பிறகு தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், நாளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.