கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.
இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இதற்கான பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பார்வதிபுர கிராம மக்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது எனப் பார்வதிபுர கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.