சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக மகளிர் விடுதி மற்றும் தபால் நிலையம் அருகே, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், அந்தப் பகுதியில் சந்தைக்கு காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள், அனைத்து வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு பொதுமக்களும் இயற்கை உபாதை கழிக்க கழிவறை இல்லாமல் சிரமம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில், சில இளைஞர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அந்தப் பகுதியில் இருப்பது மகளிர் விடுதி என்று கூட கருதாமல் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது, அங்குள்ள மாணவிகள் மத்தியில் முகம் சுளிக்க வைக்கும் நிகழ்வாக இருந்து வந்தது. இதையடுத்து பிசி கார்னர் பகுதியில் கழிவறை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது பேரூராட்சி மன்றத் தலைவர் பழனியிடம் இதுகுறித்த கோரிக்கையை பொதுமக்கள் வைத்தனர். கழிவறையின் முக்கியத்துவத்தை அறிந்து உடனடியாக தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் 15.00 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பிசி கார்னர் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கழிவறை கட்டும் பணிக்கு பேரூராட்சி தலைவர் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் கழிவறை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் க.பழனி தலைமைத் தாங்கி அடிக்கல் எடுத்து வைத்தார். இவருடன் துணைத் தலைவர் தமிழ்செல்வி, தொழில்நுட்ப உதவியாளர் ஜெஸ்டின் ராஜா, வார்டு உறுப்பினர் இரா.லட்சுமி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், ஒப்பந்ததாரர் செல்வம், பேரூராட்சி தூய்மை மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.