கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமான பணி மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் மிக பழமையான கோயில்களில் ஒன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோயில். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. மத்திய தொல்லியல் துறையால் புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கோயிலை, மத்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்நிலையில் கோயிலை சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோயிலை சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் எவ்வித கட்டுமானப் பணி மேற்கொள்ளவும் தடை விதித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பக்தர்கள் மகிழ்ச்சி தெரவித்துள்ளார்கள்.