Skip to main content

பிரியங்கா காந்தி கைதை கண்டித்து சத்யமூர்த்திபவனில் ஆர்ப்பாட்டம்!

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி உத்தரப்பிரதேச மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள், அம்மாநில துணை முதலமைச்சருக்கு கருப்பு கொடி காட்ட லக்கிம்பூர் கேரியில் குவிந்தனர். அப்போது, துணை முதலமைச்சரை வரவேற்க சென்ற பாஜகவினரின் கார்கள் திடீரென கூட்டத்திற்குள் புகுந்ததில், நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் கார்களுக்குத் தீ வைத்தனர். மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா காரில் இருந்ததாகவும், அவரது தூண்டுதல் காரணமாகவே விவசாயிகள் மீது கார்கள் மோதியதாகவும் விவசாய அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இறந்த நான்கு விவசாயிகளில் ஒருவர் ஆஷிஷ் துப்பாக்கியால் சுட்டதால் உயிரிழந்ததாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.


லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று (04/10/2021) அதிகாலை லக்னோவில் இருந்து சாலை மார்க்கமாக பன்வீர்பூர் கிராமத்திற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கிராம எல்லையிலேயே அவரை காவல்துறையினர் தடுத்து, கைது செய்தனர். 

 

அவரின் கைதுக்குக் காங்கிரஸ் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று பிரியங்கா காந்தி கைதை கண்டித்து காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் 11.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச்.அசன் மவுலானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில்  உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யா உருவபொம்மை எரிக்கப்பட்டது.

 

அதேபோல், பிரியங்கா காந்தி கைதை கண்டித்து  மகிளா காங்கிரஸ் சார்பில்  அண்ணா சாலை,  தாராபூர் டவர் அருகே உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யா மற்றும்  பிரதமர் நரேந்திர மோடியின் உருவப் படத்தைச் சேதப்படுத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

 

 

a

சார்ந்த செய்திகள்