தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள், இன்று (26/02/2021) காலை 10.00 மணிக்கு சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
பின்னர், வரும் பிப்ரவரி 28- ஆம் தேதி அன்று தமிழகம் வரவுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பயணம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு அதிகளவில் மேயர் பதவிகள் வழங்குமாறு தி.மு.க.விடம் கேட்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, செய்தியாளர்கள் சந்திப்பு மேடையில் காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சியின் முன்னாள் தலைவர் பன்னீர் செல்வம், தற்போதைய தலைவர் முனுசாமி மேடையில் அமர்ந்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரது ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற காங்கிரஸ் தலைவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர்.
இச்சம்பவத்தால் சத்தியமூர்த்தி பவன் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. மேலும், கே.எஸ்.அழகிரி முன் காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.