தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், தி.மு.க. 3 இடங்களிலும், காங்கிரஸ், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. தலா ஒரு இடங்களிலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், மங்கலம்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் வேல்முருகனை எதிர்த்து, தி.மு.க.வைச் சேர்ந்த சம்சாத் பேகம் போட்டியிட்டு, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று மங்கலம்பேட்டை காவல் நிலையம் முன்பு கூட்டணி தர்மத்தை மதிக்காமல், நம்பிக்கை துரோகம் செய்து வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் சம்சாத் பேகம் பதவி விலக வேண்டும், கூட்டணி தர்மத்தை மதிக்காமல் செயல்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் நகர செயலாளர்களைக் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என 100- க்கும் மேற்பட்ட தி.மு.க. கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.