இந்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்குப் புதிய நிர்வாகிகளை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மறைந்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் ஹெச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் கே.வீ.தங்கபாலுவின் மகன் கார்த்திக், திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் ஆகியோரும் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக ரூபி மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர்களாக கோபண்ணா உள்ளிட்ட 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸின் 19 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.எஸ்.அழகிரி, ராமசாமி, சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர், செல்லக்குமார், மாணிக்கம் தாகூர், மோகன் குமாரமங்கலம், கார்த்திக் சிதம்பரம், விஷ்ணு பிரசாத், மாயூரா ஜெயக்குமார், பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், சசிகாந்த் செந்தில், ஜே.எம்.ஹாரூண் ரசீத், ஜோதிமணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.