திருப்பூர் மாநகராட்சித் தேர்தலில் 22 வயதான சட்டக்கல்லுரி மாணவிக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுத்துள்ளது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சியில் 5 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 55- வது வார்டில் 22 வயதான சட்டக்கல்லுரி மாணவி தீபிகா அப்புக்குட்டி என்பவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தீபிகாவின் தாய் விசாலாட்சி அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் மாநகராட்சியின் மேயராக பதவி வகித்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.ம.மு.க.வில் இணைந்த விசாலாட்சி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.
இந்த நிலையில், கடந்த 2020- ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த விசாலாட்சியின் மகளுக்கு தற்போது கவுன்சிலர் தேர்தலில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தீபிகா அப்புக்குட்டி, "தண்ணீர் பிரச்சனை, சாலை மற்றும் தெரு விளக்கு பிரச்சனைகள் உள்ளன. இந்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வைக்க விரும்புகிறேன்" என்றார்.
வேட்பாளர் தீபிகா அப்புக்குட்டிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தீபிகா போன்ற மிகுந்த நம்பிக்கை அளிக்கக் கூடிய இளம்பெண்கள், இளைஞர்களுக்கு காங்கிரஸ் கட்சி அதிக அளவில் வாய்ப்பளிக்க வேண்டும். எனக்கு காங்கிரஸ் கட்சி இப்படியொரு மகத்தான வாய்ப்பை, 22 வயதில் வழங்கியது. நல்வாழ்த்துகள் தீபி. உனது அரசியல் பயணம் வெற்றிப் பயணமாகட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.