தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள சாணாகரை கிராமத்தை சேர்ந்த மூர்த்தி அவரது மனைவி சசிகலா மற்றும் அவர்களின் கை குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வழியாக பனசக்காடு கிராமத்திற்கு சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் கட்டை பையில் ஏராளமான பொருட்களை வைத்து தொங்கவிட்டிருந்தனர். அந்த பை கீரமங்கலம் பட்டுக்கோட்டை சாலையில் கழன்று தொங்கியதை கவனிக்காமல் சென்றுவிட்டனர்.
அப்போது அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராஜாவின் மகன் சக்தி (வயது31) காவல் நிலையத்திற்கு சென்று பட்டுக்கோட்டை ரோட்டில் அண்ணாநகர் செல்லும் ரோடு அருகே ஒரு பை கிடந்தது. அந்த பையில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசு, செல்போன் போன்றவை இருந்தது. இந்த பொருட்களை உரியவர்களிடம் ஒப்படையுங்கள் என்று கூறி அந்த பையை போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார். போலீசார் அந்த பையை திறந்து பார்த்தபோது உள்ளே மணிபர்சில் 4 தங்க மோதிரங்கள், ஒரு தங்க சங்கிலி, வெள்ளி கொலுசு செல்போன் ஆகியவை இருப்பதை உறுதி செய்தனர்.
சக்தி ஒப்படைத்த நகை பையில் இருந்த செல்போனில் இருந்த செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு இது யாருடைய பை என்பதை உறுதி செய்து முகவரியை பெற்றுள்ளனர். அதாவது தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள சாணாகரை கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவருடையது என்பது தெரிய வந்தது.
அவர்களது உறவினர்கள் மூலமாக தொடர்பு கொண்டு சம்மந்தப்பட்டவர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவைத்தனர். அப்போது அங்கு வந்த மூர்த்தி மற்றும் சசிகலா கூறும்போது, “பனசக்காடு கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு கை குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை ஒரு மணிபர்சில் வைத்து ஒரு துணிப்பையில் வைத்து ஒரு கட்டைப் பையின் மேலே வைத்து மோட்டார் சைக்கிள் பக்கவாட்டில் தொங்கவிட்டிருந்தோம். கட்டை பை கழன்று நகைகள் மற்றும் செல்போன் இருந்த பை தவறி விழுந்தது தெரியவில்லை. பனசக்காடு போய் பார்த்த பிறகே காணாமல் போனது தெரியும்” என்று கூறியுள்ளனர். உள்ளே இருந்த பொருட்கள் பற்றிய விபரங்களை தம்பதிகள் சரியாக சொன்னபிறகு உரியவர்களிடம் சுமார் 3 பவுண் தங்க நகைகள் மற்றும் சுமார் 150 கிராம் வெள்ளி கொலுசு, மற்றும் செல்போனை போலீசார் ஒப்படைத்தனர். காணாமல் போன ஒரு மணி நேரத்தில் தங்க நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த கீரமங்கலம் போலிசாருக்கும் ரோட்டில் கிடந்த நகை பையை நாணயத்தோடு போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞர் சக்திக்கும் இருவரும் கண்ணீர் மல்க நன்றி கூறி பெற்றுக் கொண்டனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த பலரும் சக்தியை பாராட்டி வருகின்றனர்.