அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை தான் என எடப்பாடி பழனிசாமி தரப்பும், இரட்டைத் தலைமை தான் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் மாறிமாறி அணி திரட்டிக் கொண்டிருக்கும் நிலையில், வரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அதிமுக பொதுக் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையருக்கு ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் இருதரப்பினருக்கும் இடையே முரண்பாடு உள்ளதால் அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவே பொதுக்குழுவிற்கு அனுமதி தரக்கூடாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அதிமுகவில் நிலவும் ஒற்றைத் தலைமை குறித்த அதிகார மோதல்கள் எழுந்திருக்கும் நிலையில், சென்னை கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்த அதிமுக தொண்டர் ஒருவர் ஆவேசமாக கத்தியதோடு கையில் வைத்திருந்த பெட்ரோலை மேலே ஊற்றிக் கொண்டு தீ வைக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் இருந்த பெட்ரோலை பிடுங்கி அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.